எனக்கான கவிதை அவன்... 1

நிலா சரண்... என் பேர் அழகென்று எப்பொழுதுமே எனக்கு ஒரு திமிருண்டு.. நிலா அழகா என்று எனக்கு தெரியவில்லை... சரண் நிச்சயம் அழகு தான்... திமிரும் அழகும் அவனுக்கு அதிகமாகவே உண்டு. நான் பார்த்த., ரசித்துக் கடக்கின்ற பலரை விடவும் அவன் வித்தியாசமானவன்.

'சிரிக்கவே தெரியாதா டீ இவனுக்கு...' என என் கல்லூரி பெண்களின் குமுறலை அடிக்கடி கேட்க முடியும். நான் அப்போது தான் இளங்கலை முதல் வருட படிப்பில் இருந்தேன். அவன் முதுகலை இறுதியாண்டு. IT டிப்பார்ட்மென்ட் என்பதை விடவும் சரண் டிப்பார்ட்மென்ட் என்றே பெண்களிடம் பிரபலம். அவன் மேல் பெண்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்றால் முக்கிய காரணம் எந்த பெண்ணுடனும் அவன் பேசாதது தான் என்றே தோன்றுகிறது.

காதலிப்பதாக சொன்ன ஜூனியர்ஸை அண்ணா என்று அழைக்கவைத்தான் என்று வேற கேள்வி. எனக்கும் அவனை பிடிக்கும். ஆனால் அவன் அளவுக்கு இல்லை என்றாலும் நானும் திமிர் தான். 'அதெல்லாம் பிடிக்காது.. அவன்லாம் ஒரு ஆளா... ' என தோழிகளிடம் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்வதுண்டு. எங்கே என்னையும் அண்ணா என அழைக்க சொல்லிவிடுவானோ என்று ஒரு பயம் தான்... அவனிடம் பேசவே கூடாது தூரமாய் இருந்து பார்த்து ரசித்தபடி ஒரு வருடத்தை கடத்திவிடலாம் என்று தான் எண்ணிக் கொண்டு இருந்தேன்.. விதி யாரைத்தான் விட்டது.. சீக்கிரமே அவனுடம் பேசும் வாய்ப்பை., இல்லை இல்லை அவன் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பை பெற்றேன்...

டிப்பார்ட்மென்ட்டில் கொடுத்த வேலையை காலம்‌தாழ்த்தி முடித்ததற்காக வசவு வாங்கி என்னை நானே நொந்து கொண்டு நடந்த நேரம் தான் அவனைப் பார்த்தேன். முதல் தளத்தின் தாழ்வாரத்தில் நடந்து கொண்டு இருந்தேன். அவன் எனக்கு எதிர்புறமாக தன் தோழர்களுடன் திரும்பியவாறே பேசிக்கொண்டு வந்தான். அவன் பேசுவதையே அவன் செய்கைகளியே கவனித்தவாறே நானும் முன்னோக்கி நடக்க., திடீரென்று தான் உரைத்தது., அவன் இப்படியே வந்தால் என்னை இடித்து விடுவான் என்று. 'கடவுளே இடித்தாலும் என்னை தான் திட்டுவான்.. என்ன ஒரு மோசமான நாள்..' என்றெண்ணியவாறே முடிந்த அளவிற்கு ஒதுங்கி நடந்தேன். ஆனால் அவன் தான் என்னை கவனிக்கவே இல்லையே... சட்டென்று நானும் நின்றுவிட்டேன். அவனும் என்னை மோதிவிட்டான். என்னையறியாமல் தோழிகளுடன் பேசும் விதத்தில் வாயில் இருந்து 'லூசு..' என வந்துவிட்டது.

சுர்ரென்று ஏறிய கோபத்துடன் என்னை திட்டவந்தான். நானும் அவசரப்பட்டு விட்டோமோ என நினைப்பதற்குள்., என்ன நினைத்தானோ.., 'சாரி.. என் மேல தான் தப்பு' என தெனாவட்டாக உரைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான். அவன் வந்து இடித்துவிட்டு என்ன திமிராக சாரி வேறு. இப்போது நிஜமாகவே எனக்கு கோபம் வந்துவிட., 'தெரிஞ்சா சரிதான்..' என்றேன்.

கொடுமை அதுவும் அவன் காதில் விழுந்து தொலைத்தது.. விறுட்டென்று என் முன்னால் வந்து., 'ஆமா... வேணும்னு தான் இடிச்சேன்.. இப்போ என்ன பண்ணுவ..' என்றான்.. நான் பயத்தில் உளற ஆரம்பித்திருந்தேன். ஏனெனில் எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு சிறிய அளவுகோல் அளவிற்கு தான் இடைவெளி... அதை விரைவிலே கண்டுகொண்டவனாக., 'சாரி மா... ரியல்லி சாரி..' என்று சீக்கிரமே சென்று விட்டான்.. நானும் யோசித்தவாறே வந்துவிட்டேன்.

'ஏன் டீ... சிரிக்கிற..' என மாயா கேட்டபோது தான் எனக்கு உறைத்தது நான் சிரிப்பதே.. அதன் பின் எப்போது சரணைப் பார்த்தாலும் எவருமறியா வண்ணம் ஒரு புன்னகை கிடைக்கும் எனக்கு.. 'ஏன் அடிக்கடி சிரிக்கிற' என்ற துரத்தும் கேள்வியுடன் நானும் தோழிகளுக்கு தெரியாமல் சிரிக்க முயன்று தோற்றுக்கொண்டு இருந்தேன்.

Comments